மாஸ்கோ :
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது தனிப்பட்ட அல்லது தன் நாட்டின் எதிரிகளைப் துல்லியமாகப் பின்தொடர்வதும் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் இது முதல் தடவையல்ல என்ற போதும், எதிர்க்கட்சி அரசியல்வாதியும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலருமான அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புடினின் பங்குகுறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டாம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த நவல்னிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓம்ஸ்க் நகரில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் நவல்னி வலியால் துடிப்பதையும் அழுவதையும் படம் பிடித்த மற்றொரு பயணி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இது ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவல்னி டாம்ஸ்க் விமான நிலையத்தில் ஒரு கப் தேநீர் குடித்ததாக அவருடன் பயணம் செய்த அவரது பத்திரிகை செயலாளர் கிரா யர்மிஷ் கூறினார்:
“அலெக்ஸி நவல்னி குடித்த தேநீரில் விஷப் பொருள் ஏதோ கலந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் தனது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.
விளாடிமிர் புடினை நடுங்கவைக்கும் அளவிற்கு அவரை விமர்சிக்கக் கூடியவர் என்று புகழப்பட்ட நவல்னி, மயக்க நிலையில் சைபீரியா பகுதியிலுள்ள ஓம்ஸ்க் நகர மருத்துவமனையொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் அதிருப்தியாளர்கள் மற்றும் தவறிழைத்தவர்கள் விஷம் குடித்து அல்லது அகால மரணமடைவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு நீண்ட வரலாறாகவே உள்ளது.
2006 ஆம் ஆண்டில், முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ லண்டனில் பொலோனியம் -210 விஷம் கலந்த தேநீர் குடித்து இறந்தார். புடினின் உத்தரவுப்படி ரஷ்ய பாதுகாப்பு நிறுவனமான எஃப்.எஸ்.பியின் ஏஜெண்டுகள் இதனைச் செய்திருக்கலாம் என்று பிரிட்டிஷ் அரசு நடத்திய விசாரணையில் முடிவு செய்யப்பட்டது.
“அரசியல் சதிகார்களின் நாடகத்தை வெளிக்கொண்டுவரும் தன்மை விஷத்திற்கு உண்டு” என்று ரஷ்ய பாதுகாப்பு சேவை நிபுணரான மார்க் கலியோட்டி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்..
“சதிகாரர்கள் எதைப்பற்றியும் உணராமல் தனது தவறை மறுக்கிறபோது, ஒரு கொடூரமான மரணத்தை அடைகிறார்கள். இதுவே விஷம் தரும் பாடம்”
உயர் மட்ட ரஷ்ய அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வெடேவின் ஊழலையும் அம்பலப்படுத்திய நவல்னி, பல்வேறு தொடர் போராட்டங்களால் அரசுக்கு நீண்டகாலமாக தலைவலியை உண்டாக்கி வருகிறார், இருந்தபோதும் இது புடினின் வேலையாக இருக்குமா என்பதில் சந்தேகமிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இதை நான் ஒரு துளி கூட நம்பவில்லை” என்று டாடியானா ஸ்டானோவயா என்ற நிபுணர் தனது பொது தந்தி சேனலில் பதிவிட்டுள்ளார்.
“நவல்னியைக் கொல்வதென்பது ரஷ்ய அரசின் கனவிலும் நடக்காத ஒன்று, அப்படி நடந்தால் அது மிகப்பெரிய விளைவுகளையும் எதிர்ப்பையும் தூண்டிவிடுவதாக அமையும்” என்று இவர் சில ஆண்டுகளுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
கொரோனா வைரஸ், அண்டை நாடான பெலாரஸில் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடி மற்றும் தூர கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கபரோவ்ஸ்கின் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை ஆகியவற்றை கையாண்டுவரும் சமயத்தில் புடின் இதுபோன்ற ஒரு பிரச்சனையை புதிதாக உருவாக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
புட்டினின் யுனைடெட் ரஷ்யா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதால் புட்டினுக்கு தெரியாமல் அவரது காட்சியைச் சேர்ந்தவர்கள் இதனைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக ரஷ்ய உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகளை சந்தித்துவரும் நவல்னி, சென்ற வாரம் சைபீரிய நகரங்களான டாம்ஸ்க் மற்றும் நோவோசிபிர்ஸ்கில் நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியலின் இணை பேராசிரியரான சேவா குனிட்ஸ்கி, இந்த சம்பவம் புடின் அரசில் வளர்ந்து வரும் குழப்பத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார்.
“நவல்னிக்கு புடின் விஷம் கொடுத்தார் என்று கருதுவது இயல்பானது, அதே நேரம் அவரது எதிரிகள் எங்கு, எப்போது, எப்படி, யாரால் விஷம் கொடுத்து சாகடிக்கப்படுவார்கள் என்பதை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதே வேதனையான உண்மை” என்று குனிட்ஸ்கி ட்விட்டரில் எழுதினார்.
அரசியல் அதிகாரம் புடினிடம் இருந்தாலும், அவரின் கீழ் உள்ள சிலர் தங்கள் சொந்த பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ளவும் தங்கள் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்வதில் முனைப்பு கட்டுபவர்களாகவே உள்ளனர்.
2015-ல் ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி போரிஸ் நெம்ட்சோவ் மற்றும் 2006-ல் பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்காயா ஆகியோரைக் கொலை செய்ய உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட செச்சென்யத் தலைவர் ரம்ஜான் கதிரோவ் இதற்கு சிறந்த உதாரணம்.
இருப்பினும், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைத் தாக்கி படுகொலை செய்யும் ஒரு அமைப்பிற்கு 20 ஆண்டுகளாக தலைமை தாங்கும் புடின் மீது சந்தேகப்படாமல் இருக்கமுடியாது.
“புடின் ரஷ்ய நாட்டின் முடிசூட்டப்படாத ஆட்சியாளராக இருக்கிறார், எதிர்க்கட்சி நபர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு விஷம் கொடுத்து கொள்ளப்படுகிறார்கள், சட்டமோ விதிமுறையோ அனைத்தும் காற்றில்பறக்கிறது. எனவே, புடின் தான் இதற்கு முழுப் பொறுப்பையும் வகிக்கிறார் ”என்று கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் செர்ஜி ராட்சென்கோ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நவல்னியை மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருவதாகவும், அவரது உடல் நிலை மோசமாக உள்ளதால் இதற்கு அனுமதியளிக்க மருத்துவமனை மருத்துவருவதாகவும் அவரது தனிப்பட்ட மருத்துவர் யாரோஸ்லாவ் ஆஷிக்மின் ரஷ்ய நடுநிலை செய்தி நிறுவனமான மெதுசாவிடம் கூறினார். நவல்னியின் மற்றொரு மருத்துவர், அனஸ்தேசியா வாசிலேவா, சிகிச்சைக்காக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்ல ரஷ்ய அரசிடம் அவரது குழு உதவி கேட்டுள்ளதாக கூறினார்.
மாஸ்கோவில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கடந்த ஆண்டு 30 நாட்கள் சிறையில் இருந்த நவல்னிக்கு ஏதோவொரு ரசாயனப் பொருளால் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது அவர் விஷம் குடித்ததாக அதிகாரிகள் சிலர் கூறினர், அதில் இருந்து மீண்ட அவர் தற்போது மிகவும் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.