வாஷிங்டன்: அமெரிக்க ஐஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம்(Apple Inc), சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவில் பொதுப் பட்டியலில் உள்ள நிறுவனமாகும்.

இந்நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் தனது மதிப்பை இருமடங்கு உயர்த்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனத்தினுடைய புதிய மதிப்பின்படி, உலகின் பல நாடுகளுடைய ஜிடிபி, குறைவானதே என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட முக்கிய நாடுகளின் ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி) விகிதமே, 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு குறைவாகும்.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சற்று அதிகமான ஜிடிபி மதிப்பைக் கொண்டவை.

தற்போதைய நிலையில், 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான ஜிடிபி கொண்ட நாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா 21 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஐரோப்பிய யூனியன் 19 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், சீனா 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், யூரோ பிராந்தியம் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஜப்பான் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஜெர்மனி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் இந்தியா 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆகியவை பட்டியலுக்குள் வருகின்றன.