ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளார். ராணுவப் பயிற்சி பெற்ற ரஷ்யர்களை உக்ரைனுடனா போரில் களமிறக்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டார்.

ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றியவர்கள், குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பெற்றவர்கள் அனைவரையும் ராணுவத்தில் சேர தொலைக்காட்சி மூலம் அழைப்பு விடுத்தார்.

ஒட்டுமொத்த ரஷ்ய குடிமக்களை ராணுவத்தில் சேர அழைப்பு விடுக்கப்படவில்லை என்றபோதும் புடினின் இந்த நடவடிக்கை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் படையினர் போரில் தீவிரம் காட்டி வருவதால் 3 லட்சத்திற்கும் அதிகமான படையினரை ரஷ்யா தனது எல்லையில் தயார்படுத்தி வருகிறது.

போரில் தோல்வி பயம் காரணமாக ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க குற்றம்சாட்டி உள்ளது.

அதேவேளையில், கடந்த வாரம் உஸ்பேகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புடினிடம் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் உடனான போருக்கு இது தகுந்த நேரம் அல்ல என்று அறிவுறுத்தினார்.

ரஷ்ய அதிபருடனான பிரதமர் மோடியின் ஆலோசனையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்ற போதிலும் புடின் தனது ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருவது பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.