திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப் பெரும் ஆன்மிக நிகழ்வுகளில் முக்கியமானது புரட்டாசி பிரம்மோற்சவம். . பிரம்மா ஏற்பாடு செய்ததாக கூறப்படும் இந்த உற்சவம் பிரம்மோற்சவம் என்ற பெயர் வந்தது.ஒவ்வொரு ஆண்டுமே கோடிக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கி 9 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. மேலும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் புரட்டாசி கருதப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷம் என நம்பப்படுகிறது.
இதனால் ஏழுமலையானை தரிசிக்க தினசரி பல லட்சம் பேர் குவிந்து வருகின்றனர். அதற்கு ஏற்றவகையில் ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து முடித்துள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அதே போல் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் லட்டு பிரசாத தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க எப்போதும் 8 லட்சம் லட்டுக்கள் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்திக்கு தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு, பக்தர்கள் மேலாண்மை ஆகிய பணிகளுக்காக 4500 போலீசார், 2000 க்கும் மேற்பட்ட தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள், 3,500 க்கும் மேற்பட்ட ஸ்ரீவாரி சேவா தன்னார்வ சேவையாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று புரட்டாசி கடை சனிக்கிழமையையொட்டி, எம்பெருமானை தரிசிக்க திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதுவும், புரட்டாசி 4வது சனிக்கிழமை என்பதாலும் வாரவிடுமுறை என்பதாலும் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.அ இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்கின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.