பஞ்சாப் மாநிலத்தில் மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
அமிர்தசரஸ் நகரில் உள்ள ஹோட்டல் ராடிசன் அருகே தாகூர் துவாரா மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமான கோயில் ஒன்றின் மீது மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கோயில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் வெள்ளிக்கிழமை பின்னிரவு அங்கு சந்தேகப்படும் படியாக இரண்டு நபர்கள் சென்றது தெரியவந்தது, இரவு 12 மணிக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலையளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இருவர் வழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டுகளை வீசியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உளவுத் துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்கள் ராஜசான்சி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்த நிலையில் அவர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குற்றவாளி கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறை டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாபில் மதமோதலை உருவாக்க வழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் தப்பியோடிய நபரை பிடிக்க பஞ்சாப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.