சண்டிகர்
மத்திய அரசு அளித்துள்ள உளுத்தம் பருப்பு சாப்பிட லாயக்கற்றவையாக உள்ளதால் பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பி உள்ளது.
பிரதமர் ஏழ்மை நிவாரண திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உணவு தானியங்கள் வழங்கி வருகின்றது. இந்த தானியங்கள் அந்தந்த மாநில அரசுகளால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1.4 கோடி மக்களுக்கு 10,800 மெட்ரிக் டன் தானியம் ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசு இந்த உணவு தானியங்களை வெகு நாட்களாக வழங்காமல் இருந்தது. இதையொட்டி மாநில அரசு தொடர்ந்து நினைவூட்டிய மத்திய அரசு சிறிது தானியங்களை அனுப்பி வைத்தது. மொத்தம் அளிக்க வேண்டிய தானியங்களில் இது 1% மட்டுமே எனப் பஞ்சாப் அரசு தெரிவித்தது. மேலும் இந்த தானியங்களை ஒரு மாதம் தாமதமாக மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தது.
அவ்வகையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட 45 டன் உளுத்தம் பருப்பு பஞ்சாப் மாநிலம் மொகாலி மாநிலத்தில் வழங்கப்பட்டது. இது மிகவும் மோசமாக உள்ளதாக இதைப் பெற்றவர்கள் புகார் அளித்துள்ளனர். அதையொட்டி அம்மாநில துணை ஆணையர் கிரிஷ் டியலன் அந்த பருப்பைச் சோதித்துள்ளார்.. அந்த பருப்பு துர்நாற்றத்துடன் பூஞ்சைக்காளான் பூத்து பறவைகளின் எச்சத்துடன் இருந்துள்ளது.
உடனடியாக இந்த பருப்பு விநியோகத்தை நிறுத்திய டியலன் இந்த பருப்பு மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை எனப் பஞ்சாப் உணவு வழங்கல் துறை இயக்குநருக்குப் புகார் அளித்துள்ளார். அதையொட்டி இந்த பருப்பை மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பி உள்ளது. மேலும் தரமற்ற பருப்பைச் சோதிக்காமல் மக்கள் விநியோகத்துக்கு அனுப்பி வைத்த அலுவலக ஊழியர்கள் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ள்து.