சண்டிகர்: கடந்த குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது காணாமல் போன 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் விவசாயிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, ஒரு தனி ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது பஞ்சாப் மாநில அரசு.
மேலும், டெல்லி காவல்துறையால் கிரிமினல் நடவடிக்கைக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், வழக்கறிஞர்கள் கொண்ட பேனல் ஒன்றையும் அமைத்துள்ளது பஞ்சாப் அரசு.
கடந்த குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக, கைது செய்யப்பட்ட 120 நபர்களின் பட்டியலை வெளியிட்டது டெல்லி காவல்துறை.
மேலும், அந்தப் பேரணியின்போது ஏற்பட்ட களேபரத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும் காணாமல் போயுள்ளனர். இதனால், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான ஒரு ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் இலவச சட்ட உதவிக்காக, வழக்கறிஞர்கள் அடங்கிய ஒரு பேனலையும் நியமித்து அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.