சண்டிகர்
மாநில அடைப்பால் துயருறும் ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வரும் மார்ச் வரை பணி புரியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலரும் தங்கள் பணிகளை வீட்டில் இருந்து செய்து வருகின்றனர். ஆனால் தினக் கூலி பெறும் பல ஏழைத் தொழிலாளர்கள் தற்போது பணி இன்றி வாடி வருகின்றனர். பலரது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 7 ஆம் தேதி இத்தாலி வழியாக ஜெர்மனியில் இருந்து டில்லி வந்து அங்கிருந்து பஞ்சாப் வந்த முதியவர் அன்றே மரணம் அடைந்தார். மரணமடைந்தவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததாகக் கூறப்பட்ட போதிலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் எழுந்தது. இதையொட்டி மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பணி இன்றி ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் உணவுக்கும் வழியில்லாத நிலையில் உள்ளனர். பஞ்சாபில் உள்ள மத்திய அரசு கிடங்குகளில் 2 கோடி டன் உணவு தானியங்கள் உள்ளன. அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக அளிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் வைரஸில் இருந்து தப்பிய மக்கள் பட்டினிச் சாவில் இருந்தும் தப்பிக்க முடியும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.