சண்டிகர்: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் எந்தவித போராட்டங்களும் கொண்டாட்டங்களும் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில அரசு.
இந்த விஷயத்தில், பாகிஸ்தான் அரசால் நிகழ வாய்ப்புள்ள எந்தவிதமான சலசலப்பையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் அமரீந்தர் சிங்.
இதுதொடர்பாக, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சூழலை ஆய்வுசெய்வது குறித்து, மாநிலத்தின் உயரதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வ சந்திப்பையும் நடத்தினார் முதல்வர்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது; பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் 8000 காஷ்மீர் மாணாக்கர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். பஞ்சாபின் மாவட்டங்கள் மற்றும் காஷ்மீருக்கு அருகேயுள்ள எல்லைப்புற பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை ஆராய வேண்டும்.
காஷ்மீரிலிருந்து பஞ்சாப் வழியாக வெளியேறும் நபர்களின் பாதுகாப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காஷ்மீருக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள் இந்த இக்கட்டான சூழலில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் அமைதிகாக்க வேண்டும்” என்றுள்ளார்.