சண்டிகர்:
அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மாநிலத்தில் 6லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிபின்னர் அவர் பேசியதாவது: மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் வரையில் ஓய மாட்டேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்களுக்கு மேலும் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
வரும் 2021 ம் ஆண்டு நிதியாண்டிற்குள் 50 ஆயிரம் அரசு வேலைவாய்ப்புகளும்,2022 நிதியாண்டிற்குள் மேலும் 50 ஆயிரம் அரசு வேலைவாய்ப்புகளும் இளைஞர்களுக்கு வழங்கப்படும். தனியார் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அடுத்த மாதம் மெகா வேலை மேளா நடத்தப்படும்.
கர்கர் ரோஸ்கர் திட்டத்தின் மூலம் 13.60 லட்சம் இளைஞர்கள் சுயதொழில் பெறவும், அதிக வேலைவாய்ப்பு பெறவும் அரசு உதவி உள்ளது. தொழில் துறையை ஊக்கு விக்கும் வகையில் 63 ஆயிரம் கோடி முதலீட்டுடன் ஏற்கனவே 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து பேசிய முதல்வர் அமரீந்தர்சிங் அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.74 லட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்கு வசதியாக இந்த ஆண்டு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என கூறினார்.