சண்டிகர்
பஞ்சாப் மாநில அமைச்சரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டில்லியில் 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல முறை பேச்சு வார்த்தை நடந்தும் போராட்டம் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது.
நேற்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய பாரத் பந்த் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். இதையொட்டி நேற்று பஞ்சாப் அமைச்சரவை ஒரு அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் எதிரானது ஆகும். எனவே இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்” என கூறி உள்ளார்.