சண்டிகர் :

விவசாய மசோதா விவகாரத்தில் விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் செய்து விட்டார் என்று பஞ்சாப் மாநிலம் ஃபசல்கா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுர்ஜித் குமார் ஜெயனி குற்றம் சாட்டியுள்ளார்.

“மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிசாய்க்காமல் அவர்களை உதாசீனப்படுத்தியிருப்பது கடந்த 35 ஆண்டுகளில் நான் பார்த்திராத நிகழ்வாக உள்ளது, இதுபோல் வேறு எந்த இந்திய பிரதமரும் செய்ததில்லை” என்று சாடியுள்ளார்.

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ வே இவ்வாறு கூறியிருப்பது, பா.ஜ.க நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற இந்த அரசுக்கு மனமிருந்தால் அதனை 5 நிமிடத்தில் செய்திருக்க முடியும், அதேபோல், நெல் பயிரிடுவதை தவிர மாற்று பயிர் செய்வதற்கான திட்டமோ ஆலோசனையோ கூட அவர்களுக்கு வழங்க வில்லை.

குறைந்த பட்ச ஆதார விலை முறையாக நிர்ணயம் செய்யப்படவில்லை, இதை கூறுவதால் கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று சவால் விட்டார்.

மேலும், “விவசாயிகள் மோடியின் உருவபொம்மையை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர், பா.ஜ.க. மேலிட நிர்வாகிகளான அமித் ஷா, மோடி, ஜே. பி. நட்டா ஆகியோர் விவசாயிகள் படும் வேதனையையும் அவர்களின் போராட்டத்தையும் களத்தில் வந்து பார்த்தால் தான் அவர்களின் உண்மை நிலை புரியும்” என்று ஆவேசமாக கூறினார்.

பஞ்சாப் மாநில முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த சுர்ஜித் குமார் ஜெயனி-யின் இந்த பேச்சு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வனி சர்மா, “இந்த விவகாரம் குறித்து முதலில் சுர்ஜித் குமார் ஜெயனி-யிடம் விசாரணை நடத்திய பிறகே கருத்து கூறமுடியும்” என்று கூறினார்.