புனே:

ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்ட வரைவு ஒன்றை புனேயை சேர்ந்த 5 மாணவர்கள் தயாரித்துள்ளனர். இந்த வரைவு பிரதமர் மற்றும் முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதில் புஷன் ரவுத், காமினி சுகாஸ், சைத்தயன் சென்டேஜ் ஆகியோர் ஐஎல்எஸ் சட்ட கல்லூரியிலும், கல்யாணி மாங்கேன் எம்எம்எம் சங்கரரான் சவான் சட்ட கல்லூரி, மயூரேஷ் இன்கேல் மும்பை வேஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவிகள் ஆவர்.

இச்சட்டத்துக்கு ஜாதி, மதம் இடையிலான திருமண பாதுகாப்பு மற்றும் நலச்சட்டம் 2017 என பெயரிடப்பட் டுள்ளது. இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘இதை தயாரிக்க பல மாதங்கள் ஆகியது. இதற்காக அதிக நேரம் செலவிடப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. புகார் மற்றும் பதிவான வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ள இது தொடர்பான சட்டத்தில் உள்ள ஓட்டைகள் குறித்து பாதிக்கப்பட்டனர்கள், சமூக நல அமைப்புகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கும் நிலை உள்ளது. ஏதேனும் ஒரு குடும்பத்தினர் கடத்தல் என்று புகார் செய்தால் நடவடி க்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் இது கடத்தல் வழக்கு கிடையாது. கவுரவம் என்ற பெயரில் வெறுக்கத்தக்க குற்றம் செய்யப்ப டுகிறது. இதற்கு தனியாக சட்டம் தேவை. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவாகியும் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் சட்ட வரைவை தயாரிக்க முடிவு செய்தோம்’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘இதற்கு என்று ஆணையம் தொடங்குவது என்பது புதிதல்ல. ஏற்கனவே பல ஆணையங்கள் உள்ளது. அவர்கள் சட்டத்தை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. நாங்கள் 6 பேர் கொண்ட ஒரு கமிஷனை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்.

இதில் 2 பெண்கள், குறைந்தபட்சம் எஸ்சி/எஸ்டி அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த ஒரு உறுப்பினர் இடம்பெற வேண்டும். இந்த ஆணையம் இத்தகைய திருமணங்களுக்கு என்று கொள்கைகளை வகுக்க வேண்டும்’’ என்றனர்.

அவர்கள் தொடர்ந்து கூறுகையில், ‘‘இந்த வரைவு பிரதமர் மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வரைவு தற்போது சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் பின்னர் பல அமைப்புகள் எங்களை தொடர்பு கொண்டு வருகிறது.

கோல்காபூரில் செயல்படும் ஒரு அமைப்பை நிறுவிய கோவிந் பன்சாரே என்பவரின் மகள் மேதா எங்களை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். நாசிக், லதூரில் இருந்து மக்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த இயக்கம் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றனர்.