புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று இரண்டு மென்பொறியாளர்கள் கொல்லப்பட்ட விபத்தில் பிடிபட்ட 17 வயது வாலிபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை தடயவியல் மருத்துவர்கள் இருவர் மாற்றியது தெரியவந்துள்ளது.

விலையுயர்ந்த போர்ஷே சொகுசு காரை 17 வயது மகனுக்கு ஓட்டக்கொடுத்த அவனது தந்தை விஷால் அகர்வால் மற்றும் அவனுக்கு மது விற்பனை செய்த பார் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அந்த வாலிபரின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்படாமல் மறைத்து வைத்ததற்காக நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளியும் விஷால் அகர்வாலின் தந்தையுமான சுரேந்திர குமார் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக நண்பர்களுடன் பாருக்கு சென்று குடித்துவிட்டு கும்மாளம் போட்ட அந்த வாலிபரின் சிசிடிவி காட்சிகள் சிக்கிய நிலையில் அவரது ரத்த மாதிரியில் அவர் குடிக்கவில்லை என்று வந்தது குறித்து காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் அந்த வாலிபரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த மருத்துவமனை மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, வேறு ஒரு ரத்த மாதிரியை பரிசோதனை செய்து குடிக்கவில்லை என்று சான்று வழங்கியது தெரியவந்தது.

இது தொடர்பாக தடயவியல் மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மற்றொரு மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனே போர்ஷே கார் விபத்து… 17 வயது மைனரின் தாத்தா சுரேந்திர குமார் அகர்வால் கைது…