அகமதாபாத்
சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கோவில்களில் ஆரத்திக்கான பூஜை சாமான்களை காங்கிரஸ் வழங்க இருக்கிறது.
குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தி 20க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அத்துடன் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 148 கிராமங்களில் உள்ள ராமர் கோவில்களில் ஆரத்தி எடுக்கும் தொண்டர்படை ஒன்று அமைக்க காங்கிரஸ் உத்தேசித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான தொண்டர்களை காங்கிரஸ் தேர்ந்துடுத்துள்ளது.
அந்த தொண்டர்கள் ஒவ்வொரு கோயிலிலும் தினம் இருவேளை என வாரத்துக்கு 14 முறை ஆரத்தி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்தக் கோவில்களில் பக்தர்கள் அதிகம் வராததால் சரியாக பூஜைகள் நடைபெறாததால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுடன் இந்த தொண்டர்படை அமைப்பாளர் பரேஷ் தனானி சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது அவர், “குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ராமர் கோவில் உள்ளது. ஆனால் நம்மில் பலர் கோவிலுக்கு செல்வதில்லை. கோவிலுக்கு செல்வதால் அமைதி கிடைக்கும் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இந்த ஆரத்தி கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தொண்டருக்கும் ஆரத்தி சாமான்கள் வழங்கப்படும். அதில் சங்கு, ஜாலரா மற்றும் மேளம் இருக்கும். ” எனதெரிவித்தார்.