சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலானது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்றுகளின் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்துக்கும் கீழாகவே உள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2,314 பேர் கொரோனா தொற்றில் குணம் பெற்றுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக பதிவாகி உள்ளது.
மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தொடர்ந்து இறங்கு முகத்தை நோக்கியே இருக்கிறது. கொரோனா நோயாளிகளே இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மேலும் சில மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் இன்று 9 பேருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10691 ஆக இருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் இன்று 4 பேருக்கு தான் கொரோனா தொற்று இருக்கிறது. தேனி மாவட்டத்தில் 8 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்திலும் 4 தொற்றுகள் தான் பதிவாகி உள்ளன.