images

 புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பவரின் கார் டிரைவர் அய்யப்பன் படுகொலை செய்யப்படடது அப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், சம்பட்டி விடுதி நால்ரோடு அருகில் வசிப்பவர் கணேசன். இவரது மகன் அய்யப்பன் (29). இவர் கறம்பக்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணனின் கார் டிரைவராக பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட சொக்கலிங்கம் என்பவரின் உறவினர்தான் அய்யப்பன். முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர்.

புதுக்கோட்ட மாவட்டச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்தபோது முத்தரையர்களுக்கு எதிராக பேசி பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். இதனால்தான் அவருக்கு புதுக்கோட்டை தொகுதியைக் கொடுக்காமல் விராலிமலையில் அதிமுக மேலிடம் அவரை நிறுத்தியது. இருப்பினும் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய பகுதிகளில் முத்தரையர் வாக்குகள் முழுமையாக அதிமுகவுக்குக் கிடைக்கவில்லை. புதுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முத்தரையர் சமூத்தைச் சேர்ந்தவரான சொக்கலிங்கம் 22,973 வாக்குகளைப் பெற்று கார்த்திக் தொண்டைமானின் தோல்விக்குக் காரணமாக அமைந்தார்.

இது குறித்து patrikai.com  இதழில் ஏற்கெனவே எழுதி இருந்தோம்.

 தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் அய்யப்பன் தேர்தல் சமயத்தின்போது சரவணனுக்குக் கார் ஓட்டப் போகவில்ல. இதனால் அதிமுக தரப்பு இவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரைவர் அய்யப்பன்  உடல்  கிணற்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் காட்டுத்தீயாக கிராமங்களில் பரவ அய்யப்பன் உறவினர்கள் திரண்டனர். தேர்தல் பிரச்சணையில் அய்யப்பனை கொலை செய்துவிட்டார்கள். கொலையாளிகளை கைது செய்யும் வரை  உடலை எடுக்க கூடாது என்று காவல்துறையினரை  முற்றுகையிட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடல்  மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அய்யப்பன் கொலையால் ஆலங்குடி பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. முத்தரையர் சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்ற தகவல் கிடைத்திருப்பதால் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.