சென்னை:
புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் ஜூலை 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர் தினமான இன்று தமிழகத்தில் மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இத்திட்டத்துக்காக ரூ.698 கோடியை ஒதுக்கியதுடன், வழிகாட்டுதல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1.000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

விழாவில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று, 25 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார்.