புதுச்சேரி:
புதுச்சேரி சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற, அதிமுக அரசு மறுத்து வந்த நிலையில், புதுச்சேரி அரசு தீர்மானத்தை நிறைவேற்றி மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. புதிய பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து குறளை வாசித்து பேரவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்.
முதலில், மறைந்த புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன், முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இன்று 2வது நாளாக சபை கூடியது. இன்றை கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தன் சில பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த திட்டத்துக்கு எதிராக சிறப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து, அந்த தீர்மானம் அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
சட்டமன்ற தீர்மானத்தின் நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழக சட்டமன்றத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறை வேற்றக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை கோரிக்கை விடுத்தும், தமிழக அரசு அதை செவிமடுக்க மறுத்து விட்ட நிலையில், புதுச்சேரி மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது விவசாயிகளிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.