புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இடையே உள்ள மோதலால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.  மாநிலத்தில் முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுள்ளார்.   இவருக்கும் தலைமைச் செயலர் அஸ்வினி குமாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.   இதனால் அரசு அறிவிக்கும் பல மக்கள் நலத் திட்டங்கள், மழை நிவாரண தொகை உள்ளிட்டவை வழங்கப்படாமல் உள்ளது.

மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து முதலாவதாக வந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.  ஆனால் தீபாவளி முடிந்து பல நாட்கள் ஆகியும் இது வழங்கப்படவில்லை.

கடும் கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு அறிவித்துள்ள ரூ.5000 நிவாரணம், மற்றும் நிலங்கள், வீடுகளுக்கான நிவாரணத்தொலை ஆகியவையும் இதுவரை மக்களுக்கு அளிக்கப்படவில்லை.   புதுச்சேரி முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் மோதல் போக்கால் மக்கள் கடுமையாகத் தவித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி ஆளும் கட்சி மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளரை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.  கனமழைக்காலத்தில் மாநிலத்தில் உள்ள ஐ ஏ எஸ் மற்ரும் ஐ பி எஸ் அதிகாரிகள் ஒருவர் கூட களப்பணி செய்யவில்லை எனவும் தலைமைச் செயலர் காலிப் பணி இடங்களை நிரப்புவதிலும் தலைமை செயலர் எதிராக உள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.