புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 27, 2026) 16வது முறையாக மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறை மாநில அஸ்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், புதுச்சேரி மக்களின் கோரக்கையை மத்திய அரசு, செவிடன் காதில் ஊதிய சங்கைபோல கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மீண்டும் புதுச்சேரி சட்ட பேரவையில் 16வது முறையாக, தனி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 12 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று சட்டப்பேரவையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தீர்மானங்களை கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீர்மானத்தன்மீது அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  அதில்,  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே வழங்க வேண்டும், நிர்வாக விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவையில் 16 ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், புதுவை சட்டப்பேரவையில்  கடந்த காலத்தில், மாநில அந்தஸ்து தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள்  இதுவரை மத்திய அரசுக்கே அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரவித்தார். மேலும்,  புதுச்சேரியில்,  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகுதான், 2022-ம் ஆண்டு மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்கு முதல்முறையாக அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது.

தீர்மானம் நிறைவேற்றினால் மாநில அந்தஸ்து தந்துவிட  வேண்டும் என்பது இல்லை. அதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். டெல்லியில் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்போம். நிதிக் கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க மத்திய அரசிடம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.

2022 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,  புதுச்சேரியில் தற்போது 3வது முறையான மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.