புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல்  இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட எராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில்,  சிறுமிக்கு பிடித்தமான பொருள்கள் வைக்கப்பட்டு உள்ளன.

புதுச்சேரியில் காணாமல் போன் சிறுமி 2 நாள் கழித்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி கைகால்கள் கட்டப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன், புதுச்சேரி மாநில கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தது. இதையடுத்து,  சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்  வழங்குவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதுபோல, சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேட்டு நிலைகுலைந்துவிட்டேன்; குற்றவாளிகளுக்கு 1 வாரத்தில் தண்டணை வழங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என கூறிய கவர்னர் தமிழிசை, சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாநில காவல்துறை உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய கவர்னர், ஒட்டுமொத்த காவலர்களையும் மாற்ற உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில்,  உயிரிழந்த சிறுமியின் உடல் இன்று பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்  பயன்படுத்திய விளையாட்டு பொருள்கள், பள்ளிப் பபை, பாடப் புத்தகம், துணிகளை வைத்து அஞ்சலி செலுத்திய உறவினர்கள், சிறுமியின் உடலுடன் அந்த பொருள்களையும் வைத்து நல்லடக்கம் செய்தனர். முன்னதாக அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. நூற்றுக்கணக்கானேருடன் அடக்கம் செய்யும் இடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டபிறகுழு உடல் நல்லடக்கம் செய்தனர். அத்துடன், அந்த  சிறுமி பயன்படுத்திய பொருள்களையும் வைத்து அடக்கம் செய்தனர். அப்போது அனைவரும் கண்ணீர் மல்க அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.


புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது. தொடர்ந்து சோலைநகரில் வீடு, வீடாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து அம்பேத்கர் நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமியின் கை, கால்களை கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாக கட்டி வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதில், சிறுமியின் உள்ளுறுப்புகளில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு இடமாற்றம் செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.