புதுச்சேரி:
புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் கல்வீசி தாக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள குருசுகுப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். 46 வயதே ஆன இவர், காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருக்கிறார். இவர் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
இவரது தொழில், மார்க்கெட்டில் மீன்களை ஏலம் எடுத்து அதை மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விற்பனை செய்வது. இந்நிலையில் அதிகாலையில் மீன் ஏலம் எடுக்க மார்கெட்டுக்கு வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த குமபல் அவரை விரட்டிச்சென்று ஆம்பூர் சாலை-செஞ்சிசாலை இடையில் உள்ள செட்டித்தெரு பாலத்தில் மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செய்தி பரவியதும் பெரிய மார்க்கெட் மீன் வியாபாரிகள், பெண்கள் அங்கு விரைந்து வந்தனர். உறவினர்களும் அங்கு விரைந்து வந்தனர். பாண்டியனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆகியோரும் அங்கு வந்தனர்.
போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக குருசுகுப்பத்தை சேர்ந்த ஒரு கும்பல் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.