புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் புறக்கணித்த நிலையில், கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி செய்து வரும் என்ஆர் காங்கிரஸ் தலைவரான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடைசி நேரத்தில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் வழக்கமாக நடைபெறும் நிதிஆயோக் கூட்டங்களில் மாநில முதல்வர்கள் அல்லது முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், இந்த முறை பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறத்தப்பட்டிருந்தது. ஆனால், யூனியன் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறி, திமுக , காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், பிரதமர் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.
இந்த புதுச்சேரியில் பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் என்.ரங்கசாதிம, இன்றைய கூட்டத்தை திடீரென புறக்கணித்துள்ளார். நாடளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வ அடைந்தது முதல் மாநிலத்தில் பாஜக என்ஆர் காங்கிரஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியே பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து, அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றிரவு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்ற நிலையில், இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதேபோல் டெல்லியில் ஏற்கெனவே நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் ரங்கசாமி பங்கேற்காமல் இருந்தார். தற்போது நிதிஆயோக் கூட்டத்தையும் ரங்கசாமி புறக்கணித்துள்ளது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.