புதுச்சேரி,
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கவர்னராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் கிரன்பேடி உள்ளார்.
அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அடிக்க நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. அரசு நிர்வாகங்களில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.
அதுகுறித்த விவாத்தின்போது, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து பேசினர்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி ஆணையரை மாற்றக்கோரி அதிமுக எம்.எல்.ஏ. அன்பழ கன், மற்றும் அமைச்சர்கள் குரல் கொடுத்ததால், சட்டமன்ற விதிப்படி சபாநாயகர் வைத்திய லிங்கம், ஆணையர் சந்திரசேகரை இடமாற்றம் செய்து காத்திருப்பு பட்டியலில் வைக்கவும், எம்.எல்.ஏ. பாஸ்கரன்மீது ஆணையர் கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்யகூடாது என்றும் ஆணையிட்டார்.
ஏற்கனவே அரசுக்கும் கவர்னருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாத நிலையில், டில்லி சென்றுள்ள கிரண்பேடி, அங்கிரு வாட்ஸ்-அப்பில் பத்திரிகைகளுக்கு ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.
அதில், நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீது எடுக்கபட்டுள்ள நடவடிக்கை வரம்பு மீறியது, பணி விதிகளைமீறி அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நான் டெல்லி சென்றுள்ளபோது காத்திருப்போர் பட்டியலில் அவரை வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை பிற அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இனி அதிகாரிகள் சுயமாக செயல்படமாட்டார்கள் என்றும்,
அரசியல் சட்டத்தில் நிதி மற்றும் பணி விதிகள் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தெளிவாக வரையறுக்கபட்டுள்ளது.
யூனியன் பிரதேச நிர்வாகியான துணைநிலை ஆளுநருக்கு உள்ள பொறுப்புகளை மத்திய உள்துறை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் வலியுறுத்தியுள்ளது. தற்போது புதுச்சேரி அரசு இவை அனைத்தையும் மீறி உள்ளது.
தலைமைச் செயலாளரும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், பதவி உயர்வு வழங்கும் அதிகாரமும் துணை நிலை ஆளுநரிடம்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரும் 3ந்தேதி தலைமை செயலாளர் தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், புதுச்சேரி அரசோ, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே உழவர்கரை ஆணையர் ரமேஷ், பாண்டிச்சேரி ஆணையர் சந்திரசேகர் உட்பட பல அதிகாரிகளை இடமாற்றம் செய்வதுக்கு ஒரு பட்டியலை தயார் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் கோரிக்கைகளை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, ஆளுநர் மூலமாக புதுச்சேரியில் ஆட்சியை கலைக்க பல வேலைகள் நடைபெற்றுவருகிறது என்பது இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் தெரிய வருகிறது என்றும் இதன் காரணமாகவே ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினர்.
தொடர்ந்து ஆளுநர் மூலமாக மத்திய அரசு முதல்வருக்கு மேலும், மேலும் நெருக்கடி கொடுப்பதாலும், சுமூகமாக சரி செய்வதற்கு பாஜக நண்பர்களை சந்திப்பதுக்காகவும் , ஜி.எஸ்.டி, மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும் முதல்வர் நாராயணசாமி டில்லி சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.