சென்னை: நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை திடீரென வந்து, விஜயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி, “இயல்பான வழக்கமான சந்திப்புதான். விஜய் நல்ல நண்பர். வழக்கமாக பேசுவேன். வேறொன்றுமில்லை” என்று குறிப்பிட்டு விட்டு சென்றுவிட்டார்.
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ரங்கசாமி விஜயை சந்தித்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜகவுடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், விஜய் மக்கள் இயக்கத்துடன் எதிர்காலத்தில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கைகோக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.