narayanaswamy-sworn-in-as-cm-of-puducherry
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 19-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில், புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக, புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள காந்தி திடலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.நாராயணசாமி சரியாக 12.00 மணிக்கு பதவி ஏற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவருடன் அமைச்சர்களாக ஏ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் பதவி ஏற்றனர்.
பிறகு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த விழாவில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், தில்லா ரெட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், புதுச்சேரியின் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.