புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டதுடன், அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) சி.பி.ராதாகிருஷ்ணனுடன் வாதம் செய்த காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள், துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) சி.பி.ராதாகிருஷ்ணனின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை (ஜூலை 31) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் பேசத் தொடங்கியதுமே திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக எழுந்து நின்று பேசத் தொடங்கினர். அவர்களிடம், “முதலில் எனது உரையை கேட்டு விட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் என்று கூறிய ஆளுநர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி சட்டப் பேரவையில் எனது முதல் உரை இது என்று கூறியதுடன், தற்போது, வேறு மாநிலத்துக்கு மாற்றப் பட்டதால் இதுவே கடைசி உரையும்” என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.
ஆனால், இதை ஏற்காக திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் , மத்திய, மாநிலஅரசுகள் மக்களின் கோரிக்கையை ‘எதையுமே நிறைவேற்றவில்லை’ என அரசை விமர்சித்துவிட்டு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக இன்று புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு புனித நீர் மைய மண்டபத்தில் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் வரத்தொடங்கினர். முதல்வருக்கு எதிராக குற்றஞ்சாட்டிய பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களில் ஒருவரான ரிச்சர்ட் முதல்வர் ரங்கசாமி வரும்போது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், ஆளுநரை வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அங்கு பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் அமர்ந்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கின. பேரவையில் ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேசத்தொடங்கியபோது, எதிர்க் கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்றனர். சிவா ஆளுநரிடம் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார். அதற்கு ஆளுநர், “தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசு தரப்பில் திருத்திக் கொள்ளட்டும். முதலில் எனது உரையைக் கேளுங்கள் என்றார். ஆனால் எதிர்க்கட்சியினர் அதை எற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர்.
பெரும்பாலும் புதுச்சேரி ஆளுநர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டைச்சேர்நத்வர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முன்பெல்லாம் ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்கள். அதையடுத்து பேரவைத்தலைவர் தமிழில் உரையை படிப்பார். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தெரிந்த ஆளுநர்கள் பதவி வகித்து வருவதால், ஆளுநரின் உரை தமிழிலேயே படிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.