புதுச்சேரி,

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை புதுவை மாநில அமைச்சர்கள் திடீரென சந்தித்து பேசினார். இதன் காரணமாக புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநில வளர்ச்சி தொடர்பாக ஆலோசித்ததாக புதுவை அமைச்சர் நமச்சிவாயம் கூறி உள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசின் திட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் தர மறுப்பதாக முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கு கிரண்பேடியும் எதிர்தாக்குதல் நடத்தி வந்தார். இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  நேற்று மாலை, புதுச்சேரி  மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா ஆனந்தராமன், திமுக எம்எல்ஏ சிவா ஆகியோர் கவர்னர் அலுவலகமான  ராஜ்நிவாஸ் வந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து பேசினர்.

இந்த பேச்சு சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக கவர்னர் மாளிகை வெளியே பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் நமச்சிவாயம்,  ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தோம். மேலும்,  புதுச்சேரி மாநில வளர்ச்சி தொடர்பாகவும்  ஆலோசித்தோம்.  ஆளுநருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை முழு திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.