புதுச்சேரி:
புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள். விபத்தின் போது சாலையில் வந்த இருவர் வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (32) இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாட இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தார்.
அப்போது புதுச்சேரி அருகேவுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலை சந்திப்பில் வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலே தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.