சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக செங்கல்பட்டு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைத்ததுடட்ன் பல புதியதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் குன்னம்பட்டில் நடந்த நிகழ்ச்சியில், ரூ.515 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ஸ்’ நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இன்று செங்கல்பட்டில் 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டுக்கு காரில் சென்ற நிலையில், சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள், தி.மு.க. தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இதே போல் செங்கல்பட்டு நகரின் நுழைவு பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். இதைகண்ட மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றம் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கீரப்பாக்கத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள்,
நெம்மேலி ஊராட்சியில் துஞ்சம் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட 47 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.280 கோடியே 38 லட்சம் ஆகும்.
இதே போல் ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் நகர்ப்புற பகுதிகளில் பட்டா இல்லாத குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 21 ஆயிரம் பேர்கள் பயன் அடைவார்கள். மேலும் இந்த விழாவில் 50,606 பயனாளிகளுக்கு ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செங்கல்பட்டு விழாவின் மூலம் மொத்தம் ரூ.1,285 கோடி மதிப்பிலான திட் டங்கள் உதவிகள் பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ரவி, கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.