காஞ்சிபுரம்:
இன்று காலை மரணம் அடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் மறைவு கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சங்கரமடத்தில் திரண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த காஞ்சிபுரம் விரைந்துள்ளனர்.
. ஜெயேந்திரர் காலமானதையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், குமரகோட்டம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் நடையும் சாத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜெயேந்திரரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்ககாக சங்கர மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் அடுத்த 3 நாட்கள் அங்கேயே வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கர மடம் பெங்களூர், வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முக்கியசாலையில் அமைந்துள்ள நிலையில் அந்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சங்கரமடத்துக்குள் அமைந்துள்ள முந்தைய மடாதிபதி சந்திர சேகரேந்திரரின் நினைவிடம் அருகே ஜெயேந்திரரின் நினைவிடத்தை அமைப்பதா, வேறு இடத்தை தேர்வுசெய்வதா என்பது குறித்து அதிகாரிகளும் சங்கர மட நிர்வாகிகளும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.