சென்னை: தமிழ்நாடு அரசு அளித்துள்ள கொரோனா முடக்கத் தளர்வுகள் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா நோய்  பரவல் கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து,  தமிழக அரசு மாநிலம் முழுவதும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை 12ந்தேதி காலை வரை நீட்டித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கியது. அதன்படி, மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  இன்று காலை முதலே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள்  தொடங்கி  நடைபெற்று வருகிறது. . அதேபோல மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைக ளை பின்பற்றி பேருந்துகளை இயக்கப்பட்டு வகிறது. இது சாமானிய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் வருகை ஏற்ப தேவையான அளவு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் காரணமாக இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் பிற சேவைகள்:

  • மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது
  • உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  • தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.
  • கேளிக்கை விடுதிகளில் (clubs), உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
  • அருங்காட்சியங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்ட அனுமதிக்கப்படும்.
  • டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
  • அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்டும்.
  • வணிக வளாகங்கள், காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
  • பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் (Entertainment, Amusement parks) 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். முகக் கவசம் அணிதல் கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை.