டில்லி,

ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியஅரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

இதையடுத்து 2017-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் மூலம், ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, ஒரே நாளில் ரூ.2 லட்சத்திற்கு அதிகமான பணம் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தாலோ அல்லது தனி நபருக்கு வழங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் படி புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் 269-எஸ்டி பிரிவில் இந்த ஷரத்து உள்ளதாக வருமான வரித்துறை விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், வருமான வரிச்சட்டத்தின் 269-எஸ்டி பிரிவை மீறுவோருக்கு, அவர் எவ்வளவு தொகையை ரொக்கமாக பெறுகிறாரோ, அதே தொகை அபராதமாக விதிக்கப்படும்; அதேநேரத்தில், அரசு, நிதி நிறுவனம், தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று ரூ.2 லட்சம் அல்லது அதை விட அதிக தொகையை ரொக்கமாக யாரேனும் பெறுவது குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால், அதை வருமான வரித்துறைக்கு blackmoneyinfo@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டாலும், அதுகுறித்தும் மேற்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த விளம்பரங்களில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவு 1/4/2017 (ஏப்ரல் மாதம்) முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ மேலும் திருமணம் போன்றவை களுக்கு பணம் எடுக்கவோ, செலவழிக்கவோ பொதுமக்களுக்கு மேலும் பிரச்சினைகள் உருவாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது,  மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, ரூ.3 லட்சத்துக்கும் அதிக தொகையை ரொக்கமாக பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். பின்னர் அது  .2 லட்சமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.