ஒகேனக்கல்
ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஏர்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர பொதுமக்கள் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதையொட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஒகேனக்கலுக்கு 1,70,000 கன அடி நீர் வந்த நிலையில், நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது
அதே நிலை நள்ளிரவு வரை நீடித்த நிலையில், அதிகாலை முதல் நீர்வரத்து குறைந்து தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒகேக்கனக்கலில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
காவிரி ஆற்றின் கரையோரங்களிலும், நீரோடைப் பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள விடுதிகள், வீடுகள் என பிரம்மாண்ட கட்டிடங்கள் சுமார் 5 முதல் 10 அடி வரை நீரில் மூழ்கி அந்த வீடுகளுக்குள் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் சிக்கியுள்ளனர். ஆற்றின் கரையோர பகுதியில், விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளும் நீரில் மூழ்கியுள்ளன.