சென்னை: வருவாய் இன்றி கடனில் சிக்கி தவிக்கும் மின்சார வாரியத்துக்கு வருமானத்தை பெருக்க, ஒரே வீட்டில், தொழில் நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒன்றிணைத்து ஒரே மின் இணைப்பாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் (9 மார்ச் 2023) இதுபோன்ற ஒரு தகவல்கள் பரவிய நிலையில், அப்போது விளக்கம் அளிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ஒரு நுகர்வோர் பெயரில் ஒரே வீடு/குடியிருப்பு கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் பல மின் இணைப்புகளை இணைக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. ஆனால், தற்போதை அதை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே திமுக அரசு மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி ஆட்சியை பிடித்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான நடவடிக்கை எடுக்காத நிலையில், அடுத்தடுத்து மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. ஏற்கனவே 500 யூனிட்டுக்கு, 1000 யூனிட்டுக்கு மேல் என மின் கட்டணங்களை பல படங்கு உயர்த்தி உள்ள நிலையில், தற்போது ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற வகையில் மின்இணைப்புகளை இணைத்து மின் கட்டணங்களை வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதனால், பொதுமக்கள் பல மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வீடு வாடகைக்கு விட்டுள்ளவர்கள், தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்திக்க நேரிடும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியை கைப்பற்றிய ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் மின்கட்டணம் உள்பட அனைத்து வகையான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டு வருகிறது. அதே வேளையில் கட்டண உயர்வுகள் குறித்து பொதுமக்கள் விவாதிக்காதவாறு அவ்வப்போது இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு தமிழக மக்களை மதி மயங்க வைத்து இலவசத்துக்கு அடிமையாக்கி வருகிறது. இதனால் அதிக கடனில் தத்தளிக்கும் மாநில அரசு, மின் கட்டணத்தை ஏற்கனவே மூன்று முறை உயர்த்தியதுடன் சொத்து வரி, தண்ணீர் வரி, பத்திரபதிவு கட்டணம், வீட்டு அனுமதி கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு என அனைத்து வகையான கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கி வருகிறது.
ஒரே வீடு/குடியிருப்பு கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் பல மின் இணைப்புகளை ஒரு நுகர்வோரின் பெயரில் இணைக்க டாங்கேட்கோ முடிவு செய்துள்ளது. இது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, ஒரே வீட்டுக்கு அல்லது தொழில் நிறுவனத்துக்கு இரண்டு இணைப்புகள் இருந்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தாலோ அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் ஏற்பட்டு வரும் தேவையற்ற மின் இழப்புகளைத் தடுக்க ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு இருந்தால், அதை கணக்கீடு செய்வதில் மின்வாரியம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யப்படும். இந்த நடைமுறை இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய மின்வாரிய அதிகாரிகள், மின்வாரியத்தில் ஏற்படும் தேவையில்லாத மின் இழப்புகளை சரி செய்யும் வகையில், இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேநேரம் ஒரு வீட்டுக்கு இரு இணைப்புகள் பெற்றிருந்தால், தலா 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். அதேபோல், ஒரே வணிக கட்டடங்களுக்கு இரு இணைப்புகள் இருக்கும்போது மின் கட்டணமும் குறைவாக வரும். இதனால், மின்வாரியத்துக்கு அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதனால், இத்தகைய இணைப்புகளைக் கண்டறிந்து ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து மின்கட்டணம் கணக்கிடப்படும். அதன்படி, ஒரே வீட்டுக்கு இரு மின் இணைப்புகள் இருந்தால், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மட்டுமே கழித்து, மற்ற யூனிட்களுக்கு கட்டணம் கணக்கிடப்படும். கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கப்படும். இதனால், நீண்டகால வருவாய் இழப்பு தடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.