கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிப்பில் ரா.பரமன் இயக்க, சமுத்திரகனி, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், பப்ளிக்.
டி.இமான் இசையமைக்க ராஜேஷ் யாதவ் – வெற்றி இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் என தமிழ்நாட்டுத் தலைவர்கள் படம் இடம் பெற்று இருந்தது.
ஆனால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா படங்கள் இல்லை.
‘வேண்டுமென்றே பெரியார், அண்ணாவை ஒதுக்கி இருக்கிறார்கள்’ என்று சமூகவலைதளத்தில் பலரும் விமர்சிக்கவே, பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் படத்தின் ஸ்கேக் பீக் – 2 இன்று வெளியாகி உள்ளது.
இதில் இந்தியன் டீ ஸ்டால் என்ற டீ கடை முன்பு, பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேடமிட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அதோடு ராமன், முருகன் வேடம் இட்டவர்கள் நிற்கிறார்கள். கூடவே, காளி வெங்கட்டும் நிற்கிறார்.
“பெரிய தலைவர்களை புறக்கணித்துள்ளார்கள்” என படக்குழுவினர் மீது விமர்சனம் எழுந்த நிலையில், பெரும் தலைவர்களைப்போல் வேடமிட்டவர்கள் உள்ள போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.
தவிர, பட இயக்குநர் ரா.பரமன் ஏற்கெனவே, “இந்தப் படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்துமே நிஜம். யார் மனமாவது புண்பட்டால் நாங்கள் பொறுப்பு கிடையாது” என்று போஸ்டர் வெளியிட்டார்.
ஆகவே இதில் என்ன உள்குத்து என தெரியவில்லை.