புதுடெல்லி: அரசின் விதிமுறைகளை மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்ற புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், இது சம்பந்தமாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கை அடுத்து, இதுகுறித்து விளக்கமளிக்க, மத்திய அரசுக்கும், மின்னணு வர்த்தக நிறுவனங்களின் தரப்புக்கும், நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காஸியாபாத்தை சேர்ந்த அஜய் குமார் சிங் என்பவர், இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் அந்த வழக்கில் கூறியிருப்பதாவது; மின்னணு வர்த்தக நிறுவனங்கள், அரசின் விதிகளை சரிவர கடைப்பிடிப்பதில்லை. பொருளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, விற்பனையாளர் குறித்த தகவல்கள், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விபரம் போன்ற தகவல்கள், முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுவதில்லை.

அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வழங்காத காரணத்தால், வாடிக்கையாளர்கள், அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

மேலும், பொருட்களை வாங்கும்போது, விற்பனையாளர் குறித்த தகவல்களும் சரிவர வழங்கப்படுவதில்லை. அத்துடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், இதுகுறித்த தகவல்களை வழங்குமாறு, மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகத்துக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.