சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என்று அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், மிதமான மழை பெய்து மக்களை மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணி முதலே சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றிரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வெளியில் வாட்டி வதைத்தது. பின்னர் பிற்பகல் சற்று காற்று வீசிய நிலையில், இரவுல் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இதனால், மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், கிண்டி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், தரமணி, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதியில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று காலை சில்லென்று வானிலை நிலவுகிறது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அற்விப்பில், அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்’ என கூறியிருந்தது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டடிருந்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் செப்டம்பர் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு மழை இடையூறாக இருக்காது என்பது கூடுதல் தகவல்.