டெல்லி: பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், நடிக்கும் விளம்பரங்களில் இடம்பெறும் நிறுவனங்களின் தயாரிப்பு தரமற்றதாகவோ அல்லது மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளோ கண்டறியப்பட்டால், அதன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அதில் நடித்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே மத்தியஅரசு, பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவின. மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க பரிந்துரைப்பது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அதிரடியாகத் திட்டமிட்டு வருகிறது.இது நுகர்வோர்கள் மத்தியில் வரபேற்பையும், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால், இந்த சட்ட வடிவு இன்றும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
இதற்கிடையில், பதஞ்சலி நிறுவனத்தின் முறைகேடான விளம்பரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் உரிமங்கள் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், எந்தவொரு விளம்பரங்களையும் ஒளிபரப்புவதற்கு முன்னர், ஒளிபரப்பாளர்கள் சுய அறிவிப்பு படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
அதன்படி , பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், நடிக்கும் விளம்பரங்களில் இடம்பெறும் தயாரிப்பு தரமற்றதாகவோ, ஏமாற்றுவதாகவோ கண்டறியப்பட்டால் அதில் நடித்தவர்களும் அக்குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. பொருள் அல்லது சேவைகள் குறித்து உண்மைக்கு மாறாக வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு, அதில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தள Infulencer களும் பொறுப்பாவார்கள் என்று கூறி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒளிபரப்பு சேவா போர்ட்டலில் இந்த சுய அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பப்படும். கடைசியாக, பத்திரிகை/அச்சு ஊடகங்களுக்காக, நான்கு வாரங்களுக்குள் சுய அறிவிப்பைப் பதிவேற்றம் செய்வதற்கு தனி போர்ட்டலை உருவாக்குமாறு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. “போர்டல் செயல்படுத்தப்பட்ட உடனேயே, பத்திரிகை / அச்சு ஊடகங்களில் உள்ள அனைத்து விளம்பரங்களும், அச்சு ஊடகங்களில் ஏதேனும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் விளம்பரதாரர்கள் சுய அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய அறிவிப்பு படிவங்கள் பதிவுகளுக்காக சம்பந்தப்பட்ட ஒளிபரப்பாளரிடம் விளம்பரதாரரால் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
விசாரணையின் போது, தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு எதிரான புகார்கள் (GAMA) போர்ட்டலின் கீழ் பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா மற்றும் CCPA வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா என நீதிமன்றம் ஆலோசித்தது. அப்போது தவறான விளம்பரங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என நுகர்வோரின் அவல நிலையை நீதிமன்றம் எடுத்துக்காட்டியது.
இந்த விஷங்களில் நுகர்வோர் புகார் தெரிவிக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (சிசிபிஏ) விதிகளை “தீவிரமாக” பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்தது.
“நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முழு அத்தியாயத்தையும் உள்ளடக்கியிருக்கும் அதே வேளையில், நுகர்வோரின் உரிமை மீறல்கள், வர்த்தகத்திற்கு விரோதமான நடைமுறைகள் மற்றும் தவறான/தவறான விளம்பரங்கள் தொடர்பான விஷயங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு CCPA ஐ நிறுவ வேண்டும் என்று கருதுகிறது. பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் மற்றும் ஒரு வர்க்கமாக நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உறுதியளிக்கவும் மற்றும் செயல்படுத்தவும், விதிகள் தீவிரமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இறுதியில் நுகர்வோருக்கு சேவை செய்வதாகவும், சந்தையில் இருந்து வாங்கப்படும் தயாரிப்புகள், குறிப்பாக சுகாதாரம் மற்றும் உணவுத் துறையில் நுகர்வோர் அறிந்திருப்பதை உறுதி செய்யவும் என்று நீதிமன்றம் எடுத்துக்காட்டியது.
நுகர்வோரை புகார் செய்ய ஊக்குவிக்கும் ஒரு குறிப்பிட்ட நடைமுறையை அமைச்சகங்கள் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது குறிப்பிடத்தக்கது. இது முன்மொழியப்பட்டது, அதனால் புகாரை சம்பந்தப்பட்ட மாநில அதிகாரியிடம் குறிக்காமல் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல முடியும்.
தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதுவரை இந்தியாவில் வெளியாகும் விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடுகள் என்பதே இல்லாமலே இருக்கிறது. யார் வேண்டு மானாலும் எதை வேண்டு மானாலும் சொல்லலாம் என்கிற நிலையே இருக்கிறது. நம் நாட்டில் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்கள் ஏராளம். ஒரு பிரபலம் நடிப்பதாலேயே அந்த பொருள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடுகிறது. ஒரு சிகப்பழகு ஸ்கீரிமை பயன்படுத்தினால் ‘சில வாரங்களில் உங்கள் மேனி பளபளவென்று மாறும்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பானத்தை குடித்தால் “உங்கள் குழந்தை டபுள் வளர்ச்சி அடையும்” என தவறாகவே விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு நுகர்வோர்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் செய்து பல நிறுவனங்கள் கல்லாக்கட்டி வருகின்றன.
மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் இருந்தால், அந்த விளம்பரம் குறித்து இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு (ஏ.எஸ்.சி.ஐ) புகார் அனுப்பலாம். புகார் உண்மை என்று தெரியவந்தால், அந்த விளம்பரத்தை நாளிதழ், டிவி உள்பட அனைத்து ஊடகங் களிலும் வெளியிடத் தடை செய்யப்படுகிறது. ஆனால், யாரும் அதுதொடர்பான புகார்களை அனுப்புவதில்லை. மேலும், இநத் புகார்கள் கவுன்சிலுக்கு சென்று விசாரணை மேற்கொள்வதற்குள், விளம்பரங்கள் கடைகோடி மக்களையும் சென்றடைந்து, அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனமும் கோடி கணக்கில் லாபம் சம்பாதித்திருக்கும். தற்போதைய நடைமுறைப்படி, இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ) என்ற ஒழுங்குமுறை அமைப்பு தவறான, மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்களைத் தடை செய்ய முடியுமே ஒழிய, அதில் நடிக்கும் பிரபலங்களுக்கு தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க முடியாது.
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களும் அந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் உத்தரவிட்டு உள்ளது.