சென்னை:  உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்  விரிவாக்கம் குறித்து அரசாணை வெளியிட்டது. இதனால் பல கிராம பஞ்சாயத்துக்குள் நகராட்சியுடனும், மாநகராட்சியுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல ஊராட்சிகளை சேர்ந்த மக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து,  எல்லை விரிவாக்கம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்து அதுகுறித்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் ,  13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் ,  கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இத்துடன்  16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அ, 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை எதிர்த்து சில பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்  போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து,  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொது மக்கள் 6 வாரங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் அனைத்தும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை, முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலாகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]