சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள  மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் மின்கட்டணம் உயராது, தற்போதுள்ள இரண்டுமாத மின் கட்டண கணக்கீடு மாதம் ஒருமுறை கணக்கிடப்படும் என திமுக, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், தற்போது, மக்களை ஏமாற்றும் வகையில் மின்கட்டண உயர்வு குறித்து தெரிவித்து உள்ளது. இதற்கு மத்தியஅரசு காரணம் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. மேலும்,  8 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட இருப்பதாகவும், மற்ற மாநிலங்களை விட குறைவு என்றும் சல்ஜாப்பு கூறியுள்ளது.

தமிழகஅரசின் கூற்றுப்படி,  200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தெரிவித்து உள்ளது. பொதுமக்களின் கருத்தானது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கலாம் என்றும், பொதுமக்கள்  கருத்துகளை தெரிவிக்க இன்றுமுதல்,  அடுத்த 30 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.