கோவை:

கோவையில் ஏற்கனவே உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க முயற்சித்ததால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அந்த கடையை அடித்து உடைத்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.

கோவை புலியகுளம் பகுதியில், ஏற்கனவே மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட மதுக்கடை இன்று மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்த மதுபானக் கடை அப்பகுதி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

புலியகுளம் பாப்பநாயக்கன்பாளையம் சாலையில் கடை எண் 1697 ஏற்கனவே  செயல்பட்டு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், அந்த பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாகவும்  மூடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் மாநகர மற்றும் நகரப்பகுதிகளில் மீண்டும் மதுபானக்கடைகளை திறந்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்தது.

இதனையொட்டி இன்றைக்கு நகரப்பகுதிகளில் மீண்டும் மதுபானக்கடை தொடங்க அரசு முடிவு எடுத்தது. அதையடுத்து, ஏற்கனவே மதுபானக்கடை நடைபெற்ற இடங்களில் மீண்டும் கடைகளை திறந்து வருகிறது.

இதற்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை கண்டு கொள்ளாமல் அரசு மீண்டும் கடைகளை திறந்து வருகிறது.

இதன் காரணமாக வெகுண்டெழுந்த கோவை புலியகுளம் பகுதி பொதுமக்கள்  கடையில்  வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை தூக்கி வீசி அடித்து நொறுக்கினர்.

சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மதுபான பெட்டிகள் மற்றும் குளிர்பான பெட்டிகளையும் மக்கள் அடித்து உடைத்து தூக்கி வீசினர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.