சென்னை:  பப்ஜி மதன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் மேலும்,  கால அவகாசம் வழங்கி உள்ளது.  இதனால் பப்ஜி மதன் வெளியே வருவது மேலும் தாமதமாகி உள்ளது.

பப்ஜி மதன் மீது சென்னை மாநகர காவல்ஆணையர் போட்ட குண்டாஸ் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு ஜாமின் வழங்கப்படாமல் 9 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையதளத்தில் பப்ஜி விளையாடும்போது, ஆபாசமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பப்ஜி மதன் என்ற யுடியூபர் கைது செய்யப்பட்டார். அவர்மீது, காவல்துறை பல செக்ஷனில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. தொடர்ந்து, அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து,  ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை சென்னை முதன்மை அமர்வு நேற்று முன்தினம் தள்ளுபடி செயதது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் கோடைகால நீதிபதி  நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மதன் தரப்பு வழக்கறிஞர், பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின்படி அவருக்கு 3 மாதம்தான் தண்டனை வழங்க முடியும். எனவும் ஆனால் அவர் ஒன்பதரை மாதங்களாக சிறையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் பெரும்பாலும் பொருத்த மற்றவை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மேலும் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி காவல்துறைக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார். இதனால் பப்ஜி மதன் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பல வழக்குகளில் அப்பாவிகளையே காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.  மேலும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள்மீதும் வழக்குகள் பாய்ந்து வருகிறது. இவ்வாறு பல வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை ஜாமினில் விடுவிக்கா மல்,  வழக்கை இழுத்தடிக்கும் நோக்கிலும், சம்பந்தப்பட்ட நபருக்கு மனஅழுத்தத்தை கொடுக்கும் வகையிலும் காவல்துறையினர் செயல் பட்டு வருகின்றனர். சட்டத்தை மீறி  காவல் ஆணையர்கள் அவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தை போடுகின்றனர். ஆனால், இந்த குண்டாஸ் பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படுவதுடன், காவல்துறையின் நடவடிக்கையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்து வரும் வருகின்றனர். இது இணையதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறது. அதுபோல, பப்ஜி மதன் வழக்கிலும் காவல்துறையின் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பப்ஜிமதன் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. பப்ஜி மதனுக்கு இணையதளத்தில் லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். இதனால், அவருக்கு ஜாமின் வழங்க  காவல்துறை திட்டமிட்டே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. பப்ஜி மதன்மீது தமிழகஅரசுக்கும், காவல்துறைக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்றும்,  எதற்காக   பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது, விருதுநகர் பாலியல்  குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்க மறுப்து ஏன்?  என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காவல்துறையினரின் இதுபோன்ற  நடவடிக்கைகள், காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் விதமாகவே உள்ளது.