ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ இன்று செலுத்திய பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 9 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட், ஓசோன்சாட்-3 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் இன்று முற்பகல் சரியாக 11.56 மணிக்கு திட்டமிட்டப்படி, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று சதிஷ்தவான் விண்வெளி தளத்தில் இருந்து வெற்றிகரமாக பாய்ந்தது.
இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்டுள்ள, இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான ஓசோன்சாட்-3 நவீன செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், இந்தியா – பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட், இஸ்ரோ ஆய்வு மையம் அனுப்பும் 84வது ராக்கெட் என்ற பெருமைக்குரியது. மேலும் இந்த ஆண்டு இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்படும் 5வது ராக்கெட் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
அண்மையில் விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட்டும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.