பாட்னா: அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்றைய போராட்டத்தின்போது, 3 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், இன்றும் 2 ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் பணியாக அக்னிபாத் என்ற திட்டதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கான வயது வரம்பு 17முதல் 21 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மேற்கொள்ள வாய்ப்ப்பு உருவாகும் இன்றும், இது பாதுகாப்பு துறை பலத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வயது வரம்பை 23ஆக உயர்த்தி மத்தியஅரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் இன்று 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின்போது 3 ரயில்களுக்கு தீவைத்ததுடன், அங்குள்ள பாஜக அலுவலகத்தையும் சூறையாடி தீ வைத்தனர். மேலும் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
பீகார், மொகியுதிநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு. பீகார், தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்றும் வன்முறையை தொடர்கிறது. ஹாஜிபுர் பரூனி ரயில்வே பாதையில், ஹொஹிதீன் நகர் ரயில் நிலையத்தில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வில்லை. அதுபோல லக்மினியா ரயில்வே ஸ்டேஷனுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் பாதைகளிலும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர்.
அதுபோல இன்று காலை, உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று ரயிலை சூறையாடிய தோடு ரயில் நிலைய சொத்துக்களையும் சேதப்படுத்தினர். உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்திய சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
Video Courtesy: Thanks ANI