சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று 5வது நாளாக போராடி வருகின்றனர். சென்னை கிண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். கிண்டி ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பார்வையற்ற பட்டதாரிகளை நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான 1% உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் ஒடுக்கி வருகிறது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது அவர்களை கைது செய்யும் காவல்துறையினர், அவர்களை வாகனத்தில் கொண்டு சென்று புறநகர் பகுதிகளிலும், பேருந்து நிலையங்களிலும் விட்டு வருகிறது. கண்தெரியாத அவர்களை நகருக்கு வெளியே கொண்டு விடும் காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இருந்தாலும், அவர்கள் தங்களது போராட்டங்களை தொடர்ந்த வருகின்றனர். நேற்று முன்தினம், திடீரென கோடம்பாக்கம் பாலத்தில் ஒன்று சேர்ந்தது மறியலில் ஈடுபட்டனர். இதனால் போககுவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து நேற்று, வேப்பேரி பகுதியில் மீண்டும் போராட்டம் நடத்தினர். . காலை 10 மணியளவில் வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதாவது பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை நகரின் முக்கிய சாலையில் நடந்த போராட்டத்தால் போலீசார் பரபரப்பு அடைந்தனர். பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர்.
ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலாக்காக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போது பலர் சாலையில் உருண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை மகளிர் போலீசார் ஒன்று சேர்ந்து தூக்கி சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் வரை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று கிண்டி ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.