சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இரண்டு நாட்களாக காவல்துறை மானிய கோரிக்கை குறித்த விவா தங்கள் நடைபெற்று வருகிறது.
இன்றைய விவாதத்தின்போத பதில் அளித்த முதல்வர், தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறு வது பேஷனாகி விட்டது என்றும், பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி போராட்டம் நடைபெறுகிறது என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமிழகத்தில் போலீசாரின் அத்துமீறல் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
இது குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து,சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,
டாஸ்மாக் கடைகக்கு எதிராக திருப்பூர் சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று கூறினார்.
மேலும், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண் தாக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக கூறிய முதல்வர், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது எந்த புகாரும் வரவில்லை அதனால் தான் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும், ‘அண்மையில் கதிராமங்கலம் கிராம மக்கள் மீதான தடியடிக்கு காரணம் அந்த கிராம மக்கள் என்றும், ராம மக்கள்தான் முதலில் போலீசார்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
கதிராமங்கலத்தில் விஷமிகளால் போராட்டம் தூண்டிவிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், விவசாயிகள் பிரச்னையில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது என்றும், அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடந்து வருகிறது என்றும் பெண்கள், குழந்தைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிவிட்டது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார்.
சில அரசியல் கட்சிகள் வேண்டு மென்றே பிரச்சினையை தூண்டிவிடுகின்றன என்றும், திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தூண்டிவிடப்பட்ட செயலாகும் என்றும் கூறினார்.
முதல்வரின் மக்களுக்கு எதிரான பேச்சு, சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு கொடுத்தது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, சாமளாபுரத்தில் பெண்களை பாண்டியராஜன் அடிக்கவே இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்.
ஆனால், திருப்பூரில் டாஸ்மாக்-குக்கு எதிராக போராடிய பெண்களை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ஏற்கனவே அமைச்சர் தங்கமணி கூறியதுபோல, தற்போது, முதல்வரும் திரும்ப சொல்லியிருப்பது கேலிக்குரியதாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.