புதுச்சேரி

பி எஸ் என் எல் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகள் வழங்க வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு “செல்ஃபி வித் பிஎஸ்என்எல்” என்ற நூதனப் போராட்டம் நடைபெற்றது.  அப்போது, ”நாடெங்கும் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்,  விரைவில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவையைத் தர வேண்டும்,

மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு வாங்கிய கடனைச் செலுத்தாமல் விட்ட போதிலும் மீண்டும் கடன் தருகிறது,   ஆனால் பிஎஸ்என்எல் வாங்கிய வங்கிக் கடனுக்கு மட்டும் தடை விதிக்கிறதே அது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியதுடன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்திற்குப் புதுச்சேரி தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.  வாலிபர் சங்க நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி, கோரிக்கையை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்ஃபி எடுத்து தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.