சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களை சத்தியம் செய்யும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, சூரிய பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், வாக்களிக்க வரும் ஒவ்வோரிடமும் வாக்குச்சாவடியில் நுழைவதற்கு முன்பாக ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்திய பிரமாணம் வாங்கிய பிறகு தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றும், ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதியின் அமர்வில் இன்று நடைபெற்றது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில், மனுதாரர் கேட்கின்ற கோரிக்கை மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், அரசையும் அணுகும்படி வழக்கை முழுமையாக முடித்து வைத்துள்ளனர்.